நேர்த்தி செம்பருத்தி

காலை எழுந்தவுடன் என்னை பார்த்து சிரித்தது. எதாவது வித்தியாசமான கோணத்தில் என்னை படம் பிடி – எனவும் கூவி அழைத்தது, நானும் (மனமிரங்கி,) மனமயங்கி சில படங்கள் எடுத்தேன். இதழ்களில் வெயில் விழுவது போல முயற்சி செய்தேன். பின்பு, பூவை போகஸ் செய்து, பின்சூழலில் உள்ளவற்றை மங்கலாகி இதனை எடுத்தேன். எனக்கே பரம திருப்தி.

hibiscus flower

பூ

இறைவனோ இயற்கையோ எதோ ஒரு ஒழுக்கம் ஒலகை இயக்குகிறது என்பதை நாம் நம்பியேயாக வேணும். நேர்த்தியின் நிறைவு எங்கும் வியாபித்து விரிந்துக் கிடக்கிறது. கல்பகோடி காலமாக உலகும் அதன் இயக்கமும் பரிணாமமும் வீறு நடைபோடுகிறது. ஆனாலும் சில செயல்கள், இம்மியும் பிசகாமல், அப்படி அப்படியே, மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது : அலையின் ஓசையும் ஆட்டமும், சூரிய விடியல் (ஆதாகப்பட்டது, பூமியின் சுத்தும் வேகம்), காற்றின் திரியல், மழை, இனப் பெருக்கம்…. இந்த செம்பருத்தி பூக்கும் முறையும், அதன் வடிவமும் இதில் சேரும் ! பூவை வர்ணிக்க தான் ஆசை, ஆனாலும் ஒரு பெரும் குறை, மலரின் பாகங்களின் தமிழ்ப்பெயர் ஒண்ணுமே தெரியவில்லை! ஓரத்தில் மட்டும் இதழ் உள்ளது, அழகாக அமைதியாக….. போதும், படமே பேசட்டும்.

நந்தியாவட்டை !

இந்த மலர்களுக்கு இன்னும் ஒரு அழகான பெயர் உள்ளது : பாரிஜாதம் ! பேச்சு வழக்கில் : நந்தியாவட்டை / நந்தியாவட்டம்! இதுவும் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் எடுத்த புகைப்படம் தான். இப்போது என் கணினி – wallpaperஐ அலங்கரிக்கிறது. இரண்டு பூக்களில் மட்டும் வெயில் படுவது தான் எனக்கு மிகவும் அழகாக தெரிகிறது !

Parijatham

இயற்கையை ரசிக்க இன்னும் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றே தோன்றுகிறது. எத்தனை எத்தனை அழகான விஷயங்கள். மனிதனால் எல்லாம் முடியும் என்று சொல்வது பேதைத்தனம். இறைவனோ / இயற்கையோ நமக்கு மேலும் ஒரு சக்தி உண்டு ! அதன் மீது நம்பிக்கை வைத்தல் அவசியம் 🙂